1. அறிமுகம்:
    1. ஈழக்காண்பி (Eelamplay) என்பது ஒரு தவணைக்கட்டண (SVOD), பரிவர்த்தன (TVOD) மற்றும் விளம்பர (AVOD) திரையோடைத் தளமாக (streaming platform) இயங்கும் அதேவேளை ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகவும் உருவாக்கம் காண்கிறது.

    2. ஈழக்காண்பியானது பொருளாதார ரீதியாக இயங்கினாலும் இதன் முன்னெடுப்புகள் அனைத்தும் நோர்வேயில் பதியப்பெற்ற, இலாபநோக்கற்ற ஓர் அறக்கட்டளையான தமிழியத்தின் முன்னெடுப்புகள் என்ற வகையில், இவை அனைத்தும் இலாப நோக்கற்றவையே. எனினும், ஈழத்தமிழர் தேசத்திடம் ஓர் உலகளாவிய திரைத்துறை கூர்ப்படைந்து செழிக்கவேண்டுமாயின் அதற்கான பொருண்மிய வளம் கட்டமைக்கப்பட வேண்டும். இத் திரையோடைத் தளத்தினால் ஈட்டப்படும் வருவாயானது, ஈழத்திரைத்துறையை மென்மேலும் செழுமைப்படுத்தும் நோக்குடன், புதிய திரைத் தயாரிப்புகளுக்கான முதலீடாக, முழுமையாகப் பயன்பட உள்ளது. இந்த அடிப்படையிலேயே தவணைக்கட்டணமும் உடன்படிக்கைகளும் வகுக்கப்படுகின்றன.


  2. தொலைநோக்கு:
    1. அரச ஊக்குவிப்போடு கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறையை எதிர்கொள்ளுகின்ற ஓர் அரசற்ற மக்கள் அல்லது தேசம் திரைத்துறையின் ஊடாக எழுச்சி பெறலாம் என்பதற்கான ஓர் உலக முன்மாதிரியை உருவாக்குதல்.

    2. ஈழத்தமிழர் தேசத்தின் கலைஞர்களையும் செயற்பாட்டாளர்களையும் உலகத் தரத்திலான திரைத்துறை மூலோபாயம் மற்றும் உத்திகளைக் கைக்கொள்ளும் வகையில் வலுவூட்டுவதன் ஊடாக, அதற்குரிய தனித்துவமான திரைத்துறை ஒன்றைத் தோற்றுவித்து, வெற்றிகரமாகப் பொதுக் குறிக்கோளைச் சாதிக்கமுடியும் என்பதை நிறுவி, ஈழக்காண்பி ஒரு பிரளயமாற்றத்தை ஏற்படுத்தும்.

    3. உலகப் பரப்பில் தனக்கென்று ஒரு நாடோ, சர்வதேச ஆதரவுத் தளமோ, ஊடகப் பலமோ இல்லையென்பது ஒரு பொருட்டல்ல. குறிக்கோளை மையப்படுத்தித் திரட்சிபெறும் கலைஞர்களும் அவர்தம் சமூகமும், தமது தேசத்தின் உரித்தாகவும் எடுத்துரைப்பாகவும் விளங்கவல்ல தனித்துவமான திரைத்துறையை உருவாக்கி, இதனூடாக உலகின் கவனத்தை வேண்டுமளவுக்கு ஈர்க்கமுடியும். இந்த அணிதிரட்சியானது உலக நிகழ்ச்சிநிரலை வகுக்கும் தரப்புகளையும் கடந்து செல்லும் ஆற்றல் வாய்ந்தது.


  3. குறிக்கோள்:
    1. ஈழ நிகழ்வுகளில் நாட்டம் கொள்ளவேண்டிய உலகளாவிய பார்வையாளர்களுக்குரிய திரைத் தயாரிப்புகளை ஓரிடப்படுத்தி, அவற்றை வகைப்படுத்தி, அவை தரமாகவும் இலகுவாகவும் அவர்களுக்குக் கிட்டும் வகை செய்யும் அதேவேளை, தவணைக்கட்டணத்தில் கிடைக்கும் வருவாயைக்கொண்டு விடுதலையை நோக்கி ஈழத்தமிழ்த் தேசத்தை நகர்த்தும் குறிக்கோளுடைய, இதுவரை சொல்லப்படாத ஈழத்துக்கதைகளை, உலகத்தரத்தில் சென்றடைய வேண்டிய படைப்புகளாகப் பார்வையாளர்கள் வியந்து நுகரும் வண்ணம் தயாரிப்பாளர்களையும் கலைஞர்களையும் இயங்கச் செய்து தரமாக வெளிக்கொணரல்.


  4. பெறுமானங்கள்:
    1. எமது அரசியல், சமூக விடுதலைக்கான தெளிவுநிலையும் கடப்பாடும் பற்றுறுதியும், எமது தேடலால் விரிவாக்கப்படுகின்ற பண்பாட்டு விழிப்புணர்வு, நுண்ணறிவு, புத்தாக்கத்திறன் ஆகியவற்றால் பலம்பெறுகின்றன.


  5. எம்மைப்பற்றி:
    1. ஈழத்தமிழர்பற்றி இதுவரை வெளியாகியுள்ள குறும்படங்களையும் முழு நீளத் திரைப்படங்களையும் உலகளாவிய பார்வையாளர்கள் ஓரிடத்தில், இலகுவாகவும் தரமாகவும் பார்க்கக் கூடியதாக ஈழக்காண்பி (Eelamplay) எனும் திரையோடைத் தளம் OTT முறையில் ஒருங்கமைத்து வழங்குகிறது.

    2. இத் திரையோடைத் தளம், 2022 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் ஆரம்பிக்கப்படும்போது, ஏறத்தாழ ஐம்பது திரை மற்றும் ஆவணப் படைப்புகளே உள்ளடக்கப்பட்டிருந்தாலும், இதன் பின்னரும் புதிய மற்றும் ஏற்கனவே வெளியாகிய படைப்புகள் தகுந்த உரிமை பெறப்பட்டு சட்டப்பூர்வமான முறையில் ஈழக்காண்பியில் தொடர்ச்சியாகச் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன.

    3. ஈழத்திரைத் தயாரிப்புகளுக்கு அப்பால் தவணைக்கட்டணப் பார்வையாளர்களுள் வெவ்வேறு வயதினருக்குத் தேவையான பொதுத் தமிழ்ப் படைப்புகளும் அவர்களின் நுகர்வுத் தேவை கருதி இங்கு உள்ளடக்கப்படுகின்றன.

    4. கணினிக்கான இணைய உலாவிகளிலும் (web browsers), திறன்பேசிகளிலும், விளையாட்டுப் பொறிகளிலும், தொலைக்காட்சி உப கருவிகளிலும் மற்றும் திறன்தொலைக்காட்சிகளிலும் (Roku, Samsung, LG, PlayStation, XBOX ONE, Amazon Fire TV, Android TV, Apple TV, iOS and Android) இரண்டுவித இயங்கு தளங்களுக்கான (iOS, Android) செயலிகளாகவும் (Apps) தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிப் பயன்பாட்டுக்கு உரிய வகையிலான மென்பொருட் தீர்வாகவும் ஈழக்காண்பி அமைகின்றது.

    5. ‘ஈழத்திரை திரைப்பட மதிப்பீட்டணி’ எனும் குழுவினால் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வரும் மதிப்பெண்ணை (rating) ஈழக்காண்பி தனக்குரிய மதிப்பெண் பொறிமுறையாகத் தேர்ந்தெடுத்துள்ளது. நம்பகமான, மூன்றாம் தரப்பு மதிப்பீடு ஒன்றின் மூலம், தரம் பிரித்துத் திரைப்படங்களைப் பார்க்கச் செய்வதன் மூலம் படைப்புக்களின் கனதிக்கான அளவீட்டு முறையொன்றை நடைமுறைப்படுத்தி ஈழத்திரைத்துறையின் தரத்தை ஆரோக்கியமாகப் பேணலாம். இந்த மதிப்பெண் முறை பார்வையாளர்களிடம் நம்பகத்தன்மையைப் பெறும்போது, படைப்புகளைத் தயாரிப்போருக்கு ஊக்கத்தை ஏற்படுத்தும் மக்கள்மயப்பட்ட ஒரு வழியாகவும் செயற்படும் நிலை உருவாகும். இது துறை சார் கூர்ப்படைதலை ஊக்குவிக்கும் என்று ஈழக்காண்பி கருதுகிறது.

    6. புலம்பெயர் சூழலில் வாழும் அடுத்த தலைமுறையினரின் சமூகப் பண்பாட்டுப் புரிதலை மேம்படுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளில் சிலவற்றுக்கு, அவர்கள் சிந்திக்கும் மொழிகளிலும் துணைத் தலைப்புகள் வழங்கிடும் ஒழுங்குகளை ஈழக்காண்பி மேற்கொண்டிருக்கிறது. ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் இத்தாலிய மொழிகளில் இந்தப் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

    7. ஈழத்தமிழர்கள் மொழி, மத மற்றும் பண்பாட்டு ரீதியாக என்றென்றும் மதிக்கும் ஆரம்பகாலத் தென்னிந்தியத் திரைத் தயாரிப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில திரைப்படங்களையும் தரமான முறையில் ஈழக்காண்பி தன்னகத்தே உள்ளடக்கவுள்ளது.

    8. ஈழத்தமிழர் பாரம்பரியக் கலைவடிவங்களை ஒளிப்பதிவாக்கிப் பேணுவதோடு அவற்றைப் பரந்த பார்வையாளர்களிடம் எடுத்துச்செல்வதற்கான சில முயற்சிகளையும் ஈழக்காண்பி முன்னெடுக்கும் அதேவேளை, தமிழ்ச் சிறார்களுக்கான சில சிறப்புப் பதிவுகளையும் சிறுவர் நிகழ்ச்சிகள் என்ற தலைப்பில் மேற்கொள்ளவிருக்கிறது.

    9. ஈழத்தமிழர்களின் திரை ஈர்ப்பை உலகத் தரத்தில் வளம்பெறச்செய்ய உதவக்கூடியவை என்று ஈழக்காண்பி கருதும் படைப்புகளில் திரையோடைத் தளத்தில் உள்ளடக்கும் உரிமையைப் பெற்று வெளியிடப் படக்கூடிய ஒரு சில பிற மொழித் திரைப்படங்களுக்குத் தமிழில் துணைத்தலைப்புகளைத் தரமான மொழி நடையிலும் அதற்கே உரிய நுட்பத்தோடும் தயாரித்து வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    10. இங்கு வெளியாகும் திரைத் தயாரிப்புகள் உரிய வெளியீட்டு உரிமை பெற்றவை. தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே அவை இங்கு சேர்த்துக்கொள்ளப்படும். இவ் ஒப்பந்தங்களின் படி தயாரிப்பாளர்களுக்கும் வருவாயில் ஒரு பகுதி சென்றடையுமாறு ஈழக்காண்பியின் சந்தைப்படுத்தல் முறை வகுக்கப்பட்டுள்ளது.

    11. ஈழக்காண்பியானது, ஈழத் திரைப் படைப்புகளை நுகர்வோரின் நலன்களைப் பேண எத்தனிப்பது போலவே தயாரிப்பாளர்களதும் கலைஞர்களதும் மேம்பாட்டைப் பேண வேண்டும் என்பதையும் தனது தலையாய நோக்காகக் கொண்டுள்ளது. இந்த வகையில், தயாரிப்பாளர்களுக்கான சந்தைப்படுத்தலை இலகுவாக்கி, அவர்களின் தயாரிப்புகளைத் தரமாகவும் விரைவாகவும், பலரை ஒரே நேரத்திற் சென்றடையும் வண்ணம், சந்தைப்படுத்தி ஊக்குவிப்பதும் முக்கியமாகிறது. திருட்டு வழிகளில் திரைப்படங்களைப் பிரதி செய்து வெளியிடும் தவறான சந்தை ஈழத் தயாரிப்புகளைப் பாதிக்காத வகையிலும், அதேவேளை நுகர்வோருக்கு நேர்மையாகவும் ஈழக்காண்பி விளங்கும். இங்கு வெளியாகும் படைப்புகள் திருட்டுக்கு உள்ளாக்கப்பட்டால் அவற்றைத் தடுக்கும் சட்ட ஒழுங்குகளையும் ஈழக்காண்பி தன்னகத்தே கொண்டுள்ளது.

    12. பார்வையாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தைக் கொடுப்பதோடு புலமைச்சொத்துத் திருட்டுப் போன்றவற்றை தவிர்க்கும் பொருட்டே உலகத்தரம் வாய்ந்த OTT தளங்களில் (Netflix) பயன்படுத்தப்படும் Digital Rights Management (DRM) தொழிநுட்ப உத்திகளுக்கு நிகரான அணுகுமுறைகளை ஈழக்காண்பியும் பயன்படுத்துகிறது.

    13. ஈழக்காண்பியின் அத்தியாவசியமான பின்னணித் தொழில்நுட்பச் செலவுகளில் பிரதானமானவை எல்லாம், வருடாந்தமாக முற்கூட்டியே செலுத்தப்பட்டாக வேண்டும் என்ற உடன்படிக்கைக் கடப்பாட்டுக்கு உட்பட வேண்டிய தவிர்க்கமுடியாத சூழல் நிலவுகிறது. இதனால், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலான, உலகளாவிய ஈழத்தமிழ் நுகர்வோர் சந்தையில், ​​பிரதானமான ஒரு திரையோடைத் தளமாக ஈழக்காண்பி நடைபயில வேண்டுமாயின், குறித்த ஒரு தொகையை முற்கூட்டியே வருடாந்தத் தவணைக்கட்டணமாகச் செலுத்துவோரைக் கொண்டிருக்கும் நிலையைக் குறைந்தபட்ச நிறைவெண்ணாக (critical mass) விரைவில் அடைந்திடவேண்டும். அப்போதுதான் பொருளாதார ரீதியாகத் தற்சார்புத் தன்மையுடன் தன்னிறைவாக இயங்க முடியும்.

    14. ஈழத்திரைத் தயாரிப்பாளர்கள், இணையவழிச் சிறப்புத் திரையிடல்களை மேற்கொண்டால் தமது வருவாய் பாதிக்கப்பட்டுவிடும் என்ற அச்சமின்றி பிரத்தியேகமான திரையிடல்களைத் துணிந்து மேற்கொள்ளச் செய்வதற்கு, போதுமான ஒரு நுகர்வோர் வட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும். இதைச் சீரிய நிறைவெண் (serious mass) ​​என்று ஈழக்காண்பி வரையறை செய்திருக்கிறது.

    15. குறைந்தபட்ச நிறைவெண்ணாக இரண்டாயிரம் பேரைத் தனது முதலாவது ஆண்டிலும் (2022), ஆரம்ப காலமான ஐந்து வருடங்களுக்குள் (2027) சீரிய நிறைவெண்ணாக இருபதாயிரம் பேரைத் தவணைக்கட்டணம் செலுத்துவோராக அனைவரின் பங்களிப்போடும் ஈழக்காண்பியால் பெற்றுக்கொள்ள முடியுமானால், அதை ஈழத்தமிழர்களுக்குப் பொதுவான ஓர் உலகளாவிய திரைத்துறை காத்திரமான முறையில் உருவெடுப்பதற்கான ஒரு மைல்கல் நிகழ்வாகக் கொள்ளலாம் என்பது இம்முயற்சியின் ஆரம்பகர்த்தாக்களின் கணிப்பு.

    16. ஈழத்தமிழர் தாயகத்துக்கு அப்பால் உலகளாவிப் பரந்து வாழும் பார்வையாளர்களிடம் அறவிடப்படும் தவணைக்கட்டணமே ஈழக்காண்பியின் பராமரிப்புக்குரிய அடிப்படை வருவாய்க்கான மூலம் ஆகிறது. ஆனால், ஆரம்ப காலமான முதல் ஐந்து வருடங்களில் ஈழத்தமிழர் தாயகத்தில் பார்வையாளர்களிடம் தவணைக்கட்டணம் அறவிடுவதில்லை என்பதை ஈழக்காண்பி கொள்கைசார் முடிவாகக் கொண்டுள்ளது.

    17. ஈழக்காண்பிக்கான தவணைக்கட்டணம் செலுத்துவோரின் எண்ணிக்கை சீரிய நிறைவு எண்ணை அடையும் வரையான ஆரம்பகாலத்தில், ஒவ்வொருமுறையும் தவணைக்கட்டணப் பணத்தை வருடாந்த ரீதியாக முற்கூட்டியே பார்வையாளர்கள் செலுத்தவேண்டும் என்பது ஒரு பொது விதியாக வரையறுக்கப்பட்டுள்ளது. இது குறித்த புரிந்துணர்வை இலாப நோக்கற்ற ஒரு பொது நோக்கு முயற்சி என்ற வகையில் ஈழத்திரையின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட பார்வையாளர்களிடம் ஈழக்காண்பி எதிர்பார்க்கிறது. பயனாளர்களின் பொருளாதார நெகிழ்ச்சித் தன்மை பற்றிய கரிசனையோடு ஈழக்காண்பி சீரிய நிறைவெண்ணை எய்திய பின்னர் மாதாந்தத் தவணைக்கட்டண முறைக்கும் இடமளிக்க உள்ளது.

    18. இம்முயற்சியை முன்னெடுக்கும் தமிழியம் அறக்கட்டளையானது இலாப நோக்கற்றதாய் இருப்பினும் ஈழக்காண்பிக்குத் தவணைக்கட்டணம் செலுத்தும் பார்வையாளர்களை வாடிக்கையாளர்களாகக் கருதி அவர்கள் செலுத்தும் தவணைக்கட்டணத்துக்குரிய பயன்பாட்டுப் பெறுமதியை வழங்குவதற்கான உத்தரவாதத்தை ஒரு நுகர்வோர் உடன்படிக்கையூடாக உறுதிப்படுத்துகிறது.

    19. இலாப நோக்கற்ற முன்னெடுப்பு என்ற அடிப்படையில் ஈழக்காண்பியில் விளம்பரங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது ஒரு பொது விதியாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. பார்வையாளர்களுக்கு இங்கே விளம்பர இடையூறுகள் இருக்காது.

    20. ஈழக்காண்பியின் பார்வையாளர் எண்ணிக்கை தனது நிறைவெண்ணை எட்டும் வரையான ஆரம்ப காலத்தில், நிகழ்நிலைத் திரையோடைத்தளத்தில் ஒரு படைப்பு வெளியாக முன்னர் மெய்நிலைத் திரைப்பட விழாக்களிலும், திரையரங்குகளிலும் பகிரங்கத் திரையிடலை மேற்கொண்ட பின்னரே இங்கு தமது படைப்புகளை வெளியிடவேண்டும் என்ற எண்ணம் தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் என்பதையும் ஈழக்காண்பியின் ஆரம்பகாலக் கட்டண உறுப்பினர்கள் புரிந்துணர்வோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    21. ஈழக்காண்பியின் ஆரம்பத் திட்டமிடலின் போதே இம் முன்னெடுப்பைப் பலப்படுத்தத் தாமாகவே முன்வந்து தயாரிப்பாளர்கள் சிலர் தமது படைப்புகளை இலவசமாக உள்ளடக்கி ஊக்குவித்துள்ளனர். அதேவேளை, இந்தத் திட்டத்தின் நோக்கைத் தெரிவித்த போது இதிலே இணைந்துகொள்ள இதர தயாரிப்பாளர்களில் பலரும் முன்வந்துள்ளார்கள்.


  6. உருவாக்கப் பின்னணி:
    1. இந்த முயற்சி 2019 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் திட்டமிடப்பட்டு இதற்குரிய இணைய முகவரியாக eelamplay.com பதிவு செய்யப்பட்டது.

    2. தமிழர் திருநாளான 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தைப் பொங்கல் நாளன்று ஈழக்காண்பித் திரையோடைத் தளம் தவணைக்கட்டணப் பார்வையாளர்களுக்குத் திறந்து விடப்படும் பொழுது இதுவே ஈழத்தமிழர்களுக்கான தனித்துவமான முதலாவது திரையோடைத் தளமாக வெளிவருகின்றது.




தற்சார்பாக இயங்க

குறைந்தபட்ச நிறைவெண்ணாக இரண்டாயிரம் பேரைத் தனது முதலாவது ஆண்டிலும் (2022), ஆரம்ப காலமான ஐந்து வருடங்களுக்குள் (2027) சீரிய நிறைவெண்ணாக இருபதாயிரம் பேரைத் தவணைக்கட்டணம் செலுத்துவோராக அனைவரின் பங்களிப்போடும் ஈழக்காண்பியால் பெற்றுக்கொள்ள முடியுமானால், அதை ஈழத்தமிழர்களுக்குப் பொதுவான ஓர் உலகளாவிய திரைத்துறை காத்திரமான முறையில் உருவெடுப்பதற்கான ஒரு மைல்கல் நிகழ்வாகக் கொள்ளலாம் என்பது இம்முயற்சியின் ஆரம்பகர்த்தாக்களின் கணிப்பு.

453
இதுவரை இணைந்துள்ளவர்கள்
2,000
இலக்கு